Monday, May 9, 2016

காலமே காலம்


காலமே காலம்
என்று கூறுவாள்
 என் அத்தை அடிக்கடி.

காலம் தான் இது
 என்பாள் மூச்சுக்கு
 முன்னூறு முறை!

எனக்கும் அவ்வழக்கு
 தன்னாலே வந்து
 விட்டது.


காலத்தை  நோகுவாள்
அவள் நேரத்தில்
 பட்ட  வேதனையை கழிப்பதற்கு


வெந்து தணியும்
மனத்திலே  சீற்றம்
எள்ளளவுமில்லை  அவளிடம்

 விரக்தியும் குமறலும்
யாரிடமுமில்லை
 எதற்கோ காலத்தின் மேல் மட்டுமே!

அநீதி  இழைத்தவர்களை
கடியவில்லை கடிந்தாள்
 என்னவோ காலத்தை.

தூக்கியெறிந்தவர்களை
 கோபிக்கவில்லை  கோபம்
ஏனோ  காலத்தின் மேலே!

பெற்ற பிள்ளைகள்
 நினைக்கவில்லை அவளை
 ஆத்திரம்  காலத்தின் மீதே! எதனாலோ?

அறியாமல் அவளிடம் கற்றது
இன்று எனக்கு கை கொடுக்க
 காலமே என்று  நினைந்து  மகிழ்வாகவே


நன்மைக்கும் தீமைக்கும்
 காலத்தின் மீது பழி போட்டு
வாழ்கிறேன்  நிம்மதியாகவே!


  

No comments:

Post a Comment